மு.க.ஸ்டாலின் – கமல்ஹாசன் திடீர் சந்திப்பு: காவிரி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

0
238

மு.க.ஸ்டாலின் – கமல்ஹாசன் திடீர் சந்திப்பு: காவிரி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திடீரென திங்கள்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு கமல் அழைப்பு விடுத்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கமல் கூறியது:
காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன். வெவ்வேறு கருத்துடையவர்களாக இருந்தாலும் காவிரி விவகாரத்தில் ஒரே திசையில் பயணிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம். இந்த விவகாரத்தில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை அண்டை மாநிலங்களுக்கும், காவிரி பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் உணர்த்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

கூட்டத்தில் பங்கேற்க திருநாவுக்கரசர், விஜயகாந்த், டிடிவி தினகரன், கே.பாலகிருஷ்ணன், தமிழிசை செஞுந்தரராஜன், தி.வேல்முருகன் உள்ளிட்ட எல்லாத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். நடிகர் ரஜினிகாந்தைச் சந்திப்பதற்கும் நேரம் கேட்டுள்ளோம் என்றார்.

மு.க.ஸ்டாலின் கூறியது: காவிரி விவகாரத்தில் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார். ஏற்கெனவே, ஒருங்கிணைந்து செயல்பட்டுத்தான் போராட்டங்களை நடத்தி வருகிறோம் என்று அவரிடம் கூறினேன். அவர் அழைப்பு விடுத்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மே 17-இல் நடைபெற உள்ள எங்களின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.