முத்தமிழ் அறிஞர் தலைவர் மு. கருணாநிதி : வரலாறான வாழ்க்கை!

0
329

வரலாறான வாழ்க்கை!

அப்போதைய தஞ்சாவூர் மாவட்டம் தற்போதைய நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924 ஜூன் 3ஆம் தேதி பிறந்தார் கருணாநிதி. பெற்றோர்முத்துவேலர், அஞ்சுகம்.

திருக்குவளை தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை படித்தார்.

1936ஆம் ஆண்டு திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் கருணாநிதியை 6ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று தலைமை ஆசிரியர் மறுத்தார்.

இடம் தரவில்லை என்றால் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் குதித்து உயிரை விடுவேன் என்று கூறி, குதிக்கவும் முனைந்தார். படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வம் கண்டு 6ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்க அனுமதிஅளிக்கப்பட்டது. இதுவே கருணாநிதியின் முதல் போராட்டமும் வெற்றியுமாகும்.

அரசியல் ஆர்வம்

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது துணைப்பாடமாக வந்தது பனகல் அரசர் குறித்த பாடம். கருணாநிதிக்கு அரசியல் அரிச்சுவடியைக் கற்றுக் கொடுத்தது அந்தப் பாடம் தான். சிறுவயதில் இருந்தே எழுத்தாளராக வேண்டும் என்று விரும்பிய கருணாநிதியை அப்போதைய அரசியல் மற்றும் சமூக சூழல் அரசியலுக்கு அழைத்து வந்தது.

முதல் தலைவர் அழகிரி

தமிழகத்தில் நீதிக்கட்சி அமைவதற்குக் காரணமாக இருந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமி தான் கருணாநிதியை ஈர்த்த முதல் தலைவர். 1934ஆம் ஆண்டு திருவாரூர் பொதுக்கூட்டத்தில் அழகிரி பேசியதைக் கேட்ட 13 வயது சிறுவனான கருணாநிதியின் மனதுக்குள் அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. பத்திரிகையாளராக, எழுத்தாளராக, நாடகம் எழுதி, சினிமாவுக்குக் கதை, வசனம் என தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தார். 1945ஆம் ஆண்டில் பெரியாரின் திராவிட கழகம் உதயமானது. திராவிடக் கழகத்தின் கொடியான கருப்புக் கொடியின் நடுவில் சிவப்பு வட்டத்தை தன் கைவிரலை அறுத்து ரத்தத்தைப் பதித்தார். பெரியார் மணியம்மை திருமணத்தின் காரணமாக திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்பட்டது.

திமுக உதயம்

1949ஆம் ஆண்டு சென்னை பவளக்காரத் தெருவில் நடந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கினார். அப்போது கருணாநிதி பிரசாரக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவைப் பொருத்தவரை நிறையப் பேச்சாளர்கள் இருந்தாலும் அண்ணா, கருணாநிதியின் பேச்சுக்குத்தான் கூட்டம் சேரும். 1952ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல். திமுகவின் கொள்கைகளோடு ஒத்துப்போன தன்னுடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வேட்பாளருக்கு ஆதரவு என்று அண்ணா ஒரு மாநாட்டில் அறிவித்தார்.

கல்லக்குடி போராட்டம்

இந்தக் காலகட்டத்தில் பழந்தமிழ் சிற்றூருக்கு டால்மியா என்னும் வடநாட்டு தொழிலதிபரின் பெயர் வைத்ததைக் கண்டித்து, டால்மியாபுரம் ரயில் நிலைய பெயர்ப் பலகையில் கல்லக்குடி என்று கருணாநிதி எழுதி ஒட்டினார். ரயில் மறியல் செய்த கருணாநிதி, கைது செய்யப்பட்டு அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 4 மாதம் தண்டனை பெற்றார்.

குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம்

அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி 6,000 தொடக்கப் பள்ளிகளை மூடினார். மாணவர்கள் பள்ளியில் பாடங்களையும், அவரவர் தந்தையின் குலத்தொழிலையும் படிக்க வேண்டுமென குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். குலக் கல்வித் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் குரல் எழுப்பினார். திமுக இந்தப் போராட்டத்தை ஆதரித்து களம் கண்டது. தமிழகமெங்கும் குலக்கல்வியின் கேடுகள் குறித்து கருணாநிதி உரையாற்றினார். இதன் காரணமாக ராஜாஜி பதவி விலகினார். காமராஜர் முதல்வரானார்.

முதல் வெற்றி

1956ஆம் ஆண்டு திருச்சியில் திமுகவின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் திமுக தேர்தலில் போட்டியிடுவது குறித்து தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலானோர் போட்டியிடும்படி வாக்களித்த நிலையில், 1957ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடத் தயாரானது.
இந்தத் தேர்தலில் காமராஜரை, பெரியார் ஆதரித்தார். தேர்தல் முடிவு காமராஜருக்குத்தான் சாதகமாக இருந்தது. திமுகவின் முன்னணித் தலைவர்கள் பலர் தோல்வி அடைந்தனர். 15 பேர் தான் வெற்றி பெற்றனர். அதில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும் ஒருவர்.

உதய சூரியன் சின்னம்

தேர்தலுக்குப் பின்னர் உதய சூரியன் என்ற நாடகத்தை எழுதினார். திமுக மாநாடுகளில் அதிகமாக மேடையேற்றப்பட்ட நாடகம் அதுதான். உதய சூரியன் என்ற தலைப்பு கட்சியினர் மத்தியில் பிரபலமானது. நாடகத்துக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்த அண்ணா, திமுகவின் சின்னமாக உதய சூரியனை ஒதுக்கும்படி தில்லியிடம் கோரினார். அது கிடைத்தது.

1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திமுகவில் முதல் பிளவு ஏற்பட்டது. கணிசமான தொண்டர்களுடன் கட்சியை விட்டு வெளியேறினார் ஈ.வெ.கி.சம்பத். தமிழ் தேசியக் கட்சி உருவானது. சம்பத்துடன் சேர்ந்து வெளியேறியவர்களில் முக்கியமானவர்கள் கவிஞர் கண்ணதாசனும், மேயர் முனுசாமியும் ஆவர்.

அண்ணா தோல்வி, கருணாநிதி வெற்றி

1962 சட்டப்பேரவை தேர்தலில் திமுக 50 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அண்ணா இந்தத் தேர்தலில் தோற்றுப் போனார். நெடுஞ்செழியன் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும், தஞ்சைத் தொகுதியில் வெற்றி பெற்ற கருணாநிதி எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றனர்.

இரவல் நிலா

இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாகக் கூறி கைது செய்து, லாரியில் அழைத்து செல்லப்பட்டு பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்ற போராட்டங்களால் கட்சியில் கருணாநிதியின் செல்வாக்கு உச்சத்துக்குப் போனது. இது கட்சியின் பிற தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அண்ணா என்றுமே ஓர் உதயசூரியன். நான் எப்போதும் இரவல் பெறும் நிலாதான் என்றார் கருணாநிதி.

ஆட்சியைப் பிடித்த திமுக

இந்திய அரசியலில் அதிர்வு அலைகளை ஏற்படுத்திய ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக 1967இல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் நிதிக்காக காகிதப்பூ என்ற நாடகத்தை நடத்தியும், சொற்பொழிவாற்றியும் தேர்தல் நிதியாக ரூ. 11 லட்சத்தைத் திரட்டி அண்ணாவிடம் வழங்கினார்.
தேர்தலில் கருணாநிதி சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார். 1967ஆம் ஆண்டு திமுக தமிழகத்தில் முதன்முறையாகப் ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வராகவும், கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். கருணாநிதிக்கு கூடுதல் பொறுப்பாக போக்குவரத்துத் துறை கொடுக்கப்பட்டது. அண்ணா பொறுப்பேற்றதும் சென்னை மாகாணத்தை தமிழ்நாடாக்கினார்.

2ஆம் முறை முதல்வர்

1971ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 184 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. சைதாப்பேட்டை தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக முதல்வரானார். 1974ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக திமுக தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். மாநில சுயாட்சித் தீர்மானத்தை உருவாக்கி பேரவையில் நிறைவேற்றினார். வரலாற்றுச் சிறப்புமிக்க வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கினார். இந்திரா காந்தி அவசரநிலையைக் கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்து மிசா சட்டத்தில் கைதானார். 1975ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர்

1977ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணாநகர் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழையும் மத்திய ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்று கருப்புக் கொடி ஊர்வலமும், திமுகவினர் இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றவும் செய்தார். அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. அதில் அண்ணாநகர் தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார்.

1981ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக தொடர் மறியல் போராட்டங்களை நடத்தினார். ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து கருணாநிதியும், க.அன்பழகனும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். அதன் பின்பு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிடாது பிரசாரம் செய்தார். ஆனால், சட்டப்பேரவையில் மேலவை எதிர்க்கட்சித் தலைவரானார். அதிமுக அரசு சட்டப்பேரவை மேலவையைக் கலைத்து கருணாநிதியின் பதவியை ரத்து செய்தது. அதன் பின்னர் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தேசிய முன்னணி என்ற புதிய அமைப்பினை தோற்றுவித்து அதன் தலைமைக்குழு உறுப்பினரானார். மத்தியில் தேசிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியது. வி.பி.சிங் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

1989இல்…

1989ஆம் ஆண்டு தேர்தலில் துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்று மூன்றாம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார். 1929ஆம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

வெற்றி பெற்ற ஒரே நபர்

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்பு அதிமுகவுக்கு அனுதாப அலை வீசியது. அந்த சமயத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றார். திமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே உறுப்பினர் அவர்தான். ஆனால், பின்னர் பதவியை ராஜிநாமா செய்தார். 1996 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது, கருணாநிதி 4ஆம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார். திமுக பங்கேற்ற ஐக்கிய முன்னணி தில்லியில் ஆட்சி அமைத்தது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஆர். நாராயணனை திமுக ஆதரிக்கும் என்று கருணாநிதி முதன்முறையாக அறிவித்தார். பள்ளிப் படிப்பை முடித்தபின் மேற்படிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் தேவைப்படும் குடும்ப வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை பள்ளிகளிலேயே வழங்க உத்தரவிட்டார். கிராமங்களுக்கு சிற்றுந்து சேவையைத் தொடங்கினார். குமரி முனையில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் கற்சிலை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக சென்னை தரமணியில் டைடல் பார்க் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தினார்.

பதவி என்பது…

கருணாநிதியின் உழைப்பு, அயராத சிந்தனை, தளராத ஊக்கம், எழுத்தாற்றல், வாதத் திறன் ஆகியவற்றால் பேரவை வரலாற்றில் வெற்றிகளை மட்டுமே கண்டார். தமிழக அரசியல் வரலாற்றில் பல்வேறு பதவிகளை வகித்த கருணாநிதி, பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டுதான். தோளில் இருந்தால் கொஞ்சம் வசதி. நழுவி கீழே விழுந்தால் அதற்காக துவண்டு போய்விட மாட்டேன் என்பார்.

ஹிந்தி எதிர்ப்பு
1963ஆம் ஆண்டு இந்திய அரசைக் கண்டித்து மதுரையில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றார் கருணாநிதி. திமுக தலைமையால் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டில் சென்னை தேனாம்பேட்டையில் அன்பகம் என்ற கட்டடத்தை வாங்கி திமுகவுக்கு சொந்தமாக்கினார். தமிழகமெங்கும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். இதன் காரணமாக 1965ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி இரவு மணி 12 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்குச் சென்று கருணாநிதியைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

5 முறை முதல்வர்

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் 9ஆம் முறையாக சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார்.14ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. 2006ஆம் ஆண்டு 13ஆவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 5ஆம் முறையாக முதல்வராகப் பதவியேற்றார். கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை 4 நாள்கள் நடத்தினார்.

தொடர்ந்து 14 மற்றும் 15ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.

45 வயதில் முதல்வர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அண்ணா 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி உயிரிழந்தார். அண்ணா இருக்கும் வரை திமுகவுக்கு தலைவர் இல்லை. நெடுஞ்செழியன் கட்சிக்குப் பொதுச்செயலாளராக இருந்தார். அண்ணா மறைந்த பின்னர் கட்சியின் தலைமை யார் என்ற குழப்பம் வந்தது.

நெடுஞ்செழியன் தான் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று பேசப்பட்டது. ஆனால், கருணாநிதி முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார். கட்சியின் பிற தலைவர்களான மதியழகன், எம்ஜிஆர் ஆகியோர் ஆதரித்தனர். பதவிப் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக நெடுஞ்செழியன் அறிவித்தார். 1969ஆம் ஆண்டு மார்ச் மாதம் கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். திமுகவின் தலைவராகவும் முடிசூட்டிக் கொண்டார். நெடுஞ்செழியன் கட்சியின் பொதுச்செயலாளராகவும், எம்ஜிஆர் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர். அப்போது கருணாநிதிக்கு வயது 45.

அண்ணாவுக்கு நினைவுச் சின்னம்

மறைந்த அண்ணாவுக்கு சென்னை கடற்கரையில் நினைவுச் சின்னம் எழுப்பினார். மத்திய மாநில அரசுகளின் அதிகாரப் பங்கீடு பற்றி நிர்ணயிக்க ராஜமன்னார் குழுவை ஏற்படுத்தினார். அண்ணாவின் நினைவாக அஞ்சல் தலை வெளியிடச் செய்தார். அதில் தமிழ் இடம் பெற வேண்டும் என்பதற்காக அண்ணாவின் கையெழுத்தை இணைத்தார்.

கருணாநிதி குடும்பம்