பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 3,700 கிலோ தங்கம் வங்கிகளில் டெபாசிட்: திருமலை-திருப்பதி தேவஸ்தானம்

0
1512

திருமலை, மார்ச்.1, 2016- திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். உண்டியல்களில் இருந்து பெறப்படும் காணிக்கை தொகை அவ்வப்போது எண்ணப்பட்டு அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதேபோல், தங்கமும் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 1,300 கிலோ எடையிலான சுத்த தங்கத்தை 3 ஆண்டுகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் டெபாசிட் செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்காக, அந்த வங்கி 1.75 சதவீதம் வட்டியை தங்கமாக கொடுக்க முன்வந்துள்ளது.

இதற்கிடையே, 1,000 கிலோ தங்கம் ஏற்கனவே ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதன் முதிர்வு காலம் நிறைவடையும் நிலையில் உள்ளது. ஸ்டேட் வங்கி, தங்கத்துக்கு வட்டியை பணமாக கொடுக்காமல் தங்கமாகவே வழங்கி வருகிறது. டெபாசிட் முதிர்வு காலம் நிறைவடைந்ததும், மீண்டும் அந்த 1,000 கிலோ தங்கத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் டெபாசிட் செய்ய தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. ஆக மொத்தம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2 ஆயிரத்து 300 கிலோ எடையிலான தங்கம் டெபாசிட் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தநிலையில், தற்போது 1,400 கிலோ எடையிலான தங்கம் உருக்கப்படாமல் உள்ளது. அந்தத் தங்கத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மும்பைக்கு எடுத்துச்சென்று மத்திய அரசு நிறுவனத்தில் தங்கக்கட்டிகளாக உருக்கி, அதனை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் டெபாசிட் செய்ய முடிவெடுத்துள்ளது.

டெபாசிட் செய்யப்பட உள்ள தங்கத்துக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 1.25 சதவீதம் வட்டியை தங்கமாக வழங்க முன்வந்துள்ளது. அத்துடன் தங்கத்தை உருக்குவதற்காக திருப்பதியில் இருந்து மும்பைக்கு எடுத்து செல்ல ஆகும் வாகன செலவு, பாதுகாப்பு, இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியே ஏற்க முன்வந்துள்ளது. தங்கத்தை டெபாசிட் செய்வதன் மூலமாக திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.