திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம்

0
680

திருமலை: கோடை காலத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஞயிற்றுக்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 31 வைகுண்ட காம்ப்ளக்ஸ்களும் நிரம்பி சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்றனர்.

திருமலையில் பக்தர்களுக்கு தங்கும் விடுதிகள் கிடைக்காமல் சத்திரங்கள், பூங்காக்களில் படுத்து ஓய்வெடுத்தும், தெப்பக்குளத்தில் குளித்தும் சாமி தரிசனத்துக்குச் சென்றனர். திருமலையில் ஆங்காங்கே தங்கியிருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவுகள், பால், மோர், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

அறைகள் முன்பதிவு செய்ய மத்திய வரவேற்பு மையத்தில் பக்தர்கள் நீண்டதூரம் வரிசையில் காத்திருந்தனர். அப்போது அறை முன் பதிவு செய்ய வரிசையில் காத்திருந்த மராட்டிய மாநில பக்தர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை, தேவஸ்தான ஊழியர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருமலையில் உள்ள அஸ்வினி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பக்தர்கள் அறைகளை முன்பதிவு செய்த 24 மணிநேரத்துக்கு பிறகு காலி செய்ய வேண்டும் என்று அவ்வபோது ஒலி பெருக்கியில் அதிகாரிகள் அறிவித்தனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், அமைனிட்டி காம்ப்ளக்ஸ், மத்திய வரவேற்பு மையம், கல்யாண கட்டா, கோவில் நான்கு மாடவீதிகள், அன்னதான கூடம், பொருட்கள் வைப்பறை, இலவச, திவ்ய, பிரத்யேக பிரவேச தரிசன கவுண்ட்டர்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இலவச தரிசனத்துக்கு 20 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 12 மணிநேரமும், ரூ.300, ரூ.50 கட்டண சிறப்பு தரிசனத்துக்கு 10 மணிநேரமும் ஆனது. நேற்று அதிகாலை 3 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 76 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 24 லட்சம் வசூலானது.