தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி

0
271
மீரான்

தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி

நான் அடிக்கடி மகள் வீட்டுக்கு பெங்களூருக்கு செல்லும்போதெல்லாம் 4 விஷயங்களை முக்கியமாக கவனிக்கிறேன். கன்னடர்களுக்கு நன்றாக தமிழ் பேசத் தெரிந்தாலும் தமிழர்களிடம் கன்னடத்தி்ல்தான் பேசுகிறார்கள். ‘நான் கன்னடன்’ என்கிற பெருமிதம் எப்போதும் அவர்கள் மனதில் இருக்கிறது. என்னதான் நட்பாக இருந்தாலும் தமிழர்கள் மீதான வெறுப்பும், அலட்சியமும் அவர்கள் பேச்சிலும், செயலிலும் இருக்கும். இதை நான் குறையாகச் சொல்லவில்லை. அந்த அளவிற்கு அவர்கள் மொழிப்பற்றும் இனப்பற்றும் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டத்தான். என்னதான் கன்டனர்கள் கட்சி ரீதியாக மோதிக் கொண்டாலும் மாநிலப் பிரச்சினை என்று வரும்போது ஒரே அணியில் வந்து நின்று கொள்கிறார்கள்.

கூடுதலாக இன்னொன்று இருக்கிறது. அங்குள்ள மக்கள் தங்கள் மாநிலத்திற்கென்று தனிக் கொடியொன்றை பயன்படுத்துகிறார்கள். இந்தியாவுக்கு மூவண்ண தேசியக்கொடி இருப்பதை போன்று அது கன்னடர்களின் கொடி. இப்போது அந்தக் கொடியை முறைப்படுத்த மாநில அரசு குழு ஒன்று அமைத்திருக்கிறது.

அப்போதுதான் எனக்குத் தோன்றியது நாமும் ஏன் தமிழ்நாட்டுக்கென்று தனி கொடி ஏற்படுத்தக்கூடாது. அது ஒட்டு மொத்த தமிழர்களுக்கான பொதுக்கொடியாக இருக்க வேண்டும். மெரீனா புரட்சி’ போன்று பொது பிரச்சினைகளுக்காக போராடுகிற இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அந்தக் கொடியை பயன்படுத்த வேண்டும். மாநில கட்சிகளும் தங்கள் கட்சிக் கொடியோடு தமிழ் கொடியையும் பயன்படுத்தலாம். பிற்காலத்தில் நாம் கட்சி சார்பற்று, ஜாதி, மதங்களை தாண்டி ஒரே குடையின் கீழ் கூடுவதற்கு இது பயன்படலாம். ‘நாம் தமிழர்’ என்ற உணர்வை ஊட்ட உதவலாம்.

தமிழ்க்கொடி எப்படி இருக்க வேண்டும்?

தமிழ்நாடு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற 5 வகையான நிலபரப்பை கொண்டிருப்பதால் தமி்ழ்க்கொடியும் 5 நிறத்தை கொண்டதாக இருக்கலாம். குறிஞ்சி, மலையும் மலைசார்ந்த பகுதியும் என்பதால் கொடியின் மேல் பகுதி அடர் பச்சை நிறத்திலும், முல்லை, காடும் காடு சார்ந்த பகுதி என்பதால் அதன் அடுத்த பகுதி வெளிர் பச்சை நிறத்திலும், மருதம் வயலும் வயல்சார்ந்த பகுதியும் என்பதால் தாணியங்களின் நிறமான மஞ்சள் நிறம் அடுத்த பகுதியாக இருக்க வேண்டும். நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதி என்பதால் கடலின் நிறமான நீலம் அடுத்ததாக இடம்பெறலாம். பாலை வறட்சி பகுதி என்பதால் அதற்கு வெள்ளை நிறத்தை பயன்படுத்தலாம்.

5 நிறங்களின் நிறத்தின் நடுவி்ல் திருவள்ளுவர் படம் இடம் பெறலாம். தமிழக அரசின் முத்திரையில் இருப்பது கோவில் கோபுரம். அது ஒரு மதத்தின் அடையாளமாக கருதப்படுவதால் எல்லா மதத்துக்கும் பொருந்தக்கூடிய தமிழ் மூப்பன் வள்ளுவர் படம் கொடியின் நடுவில் அமைவது சிறப்பாக இருக்கும். இது எனது தனிப்பட்ட யோசனைதான். மற்றவர்கள் தங்கள் யோசைனையை தெரிவிக்கலாம்.

தமிழ்க்கொடி பறக்கட்டும். தமிழன் வாழ்வு உயரட்டும்.

-மீரான்