கலைஞரை ஒருவராலும் நகல் எடுக்க முடியாது: தங்கர் பச்சான்

0
187

கலைஞரை ஒருவராலும் நகல் எடுக்க முடியாது: தங்கர் பச்சான் 

நாம் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் பாதை முன்னோர்கள் உருவாக்கி வைத்தது. பழைய பாதையே சிறந்த பாதை எனச் சொல்பவர்கள் எப்பொழுதும்போல் அதிலேயே பயணிக்க விரும்புகிறார்கள். அதில் போக விரும்பாதவர்கள் புதிபாதைக்கு திட்டமிடுகிறார்கள்.

தமிழ்நாட்டின் அரசியல் பாதையை உருவாக்கியவர்களில் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பெரும் பங்குண்டு.குறைகள் இல்லாத மனிதர்கள் எவராவது இருந்துவிடமுடியுமா எனத்தெரியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கும் ஒரு அரசியல் மனிதரை குறை கூறுவதில் வியப்பேதும் இல்லை. அரசியல் வாழ்வில் எல்லோருக்கும் பிடித்தவராக இருப்பதென்பது இயலாத காரியம்.

கலைஞர் அவர்கள் எவ்வாறு கணக்கற்ற சாதனைகளுக்கு உரியவராக இருக்கிறாரோ அதேபோல் குற்றம் சொல்லக்கூடிய கேள்விகளுக்கும் இடமளித்துவிட்டுச் சென்றிருக்கிறார். யார் எதை மறைத்தாலும் காலம் ஒரு கட்டத்தில் உண்மை நிலையை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. அப்பொழுது அத்தனைக் கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும்.

மொழியுணர்வை அடிப்படையாகக் கொண்டு தேசியக்கட்சியான காங்கிரசை ஒதுக்கிவிட்டு திமுகவை மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். கலைஞர் தவறு செய்கிறார் எனச்சொல்லி உடனிருந்த எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். வெறும் சின்னங்களை மனதில் கொண்டு மாறி மாறி நடந்து கொண்டு வந்த ஆட்சி மாற்றமே இனியும் தமிழ்நாட்டில் தொடரப்போகிறதா? புதிய பாதையில் புதிய அரசியல் தலைமையுடன் புதிய ஆட்சிக்கு வழி வகுக்கப்போகிறதா என்பதுத் தெரியவில்லை.

ஒரு மனிதனின் இறுதிப்பயனத்தில் அவனைப்பற்றிய நல்லவைகளையே பேச வேண்டும் என்பது பண்பாடு. தன வாழ்நாள் முழுவதையும் மக்கள் பணியில் இணைத்துக்கொண்ட கலைஞர் கருணாநிதி அவர்களை எவ்வளவு குறை சொன்னாலும் அவர் காலம் கடந்து மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கக்கூடியவர். அவர் உருவாக்கி வைத்துவிட்டுச் சென்ற இடம் அவருக்கு மட்டுமே உரியது. அவரை ஒருவராலும் நகல் எடுக்க முடியாது.

நான் தீவிரமான எம்ஜிஆர் பற்றாளன் என்பது கலைஞருக்குத் தெரியும். இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் கலைஞருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் மீதுள்ளக் குறைகளை அவரிடமே சொல்ல எனக்கு இடமளித்தவர். அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் அப்படிப்பட்ட பெருந்தன்மை எனக்கு இருந்திருக்காது! நல்ல கலைஞர்களையும்,படைப்பாளிகளையும்,சிந்தனையாளர்களையும் உடனே இனங்கண்டுகொள்ளக்கூடியவர். தமிழ்த்திரையுலகம் இன்றைக்கு தரங்கெட்டு, தறிக்கெட்டு சீரழிந்ததற்கு கலைஞர் அவர்கள் கடந்த காலங்களில் பொறுப்பில் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.

கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. கரகரத்த தமிழ்க்குரலும்,கறுப்புக்கண்ணாடியும்,தடித்த பேனாவும் நினைவில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது.

இனி, சோதனைக்காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. தமிழக அரசியல் கட்சிகளுக்கும் சேர்த்துத்தான்.

தங்கர் பச்சான்