இந்தியன் வங்கியின் நிகர வருவாய் ரூ.2,171 கோடி

0
217

இந்தியன் வங்கியின் நிகர வருவாய் ரூ.2,171 கோடி

இந்தியன் வங்கியின் நிகர வருவாய் (டிசம்பருடன் முடிவடைந்த 3-ஆவது காலாண்டில்) 17.62 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.2,171 கோடியை பெற்றுள்ளது என்று இந்தியன் வங்கியின் முதன்மை செயல் அலுவலர் கிஷோர் காரத் தெரிவித்தார்.
இதுகுறித்து, மூன்றாவது காலாண்டுக்கான அந்த வங்கியின் நிதிநிலை மற்றும் லாப நஷ்ட கணக்கு அறிக்கையை சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்டு, வங்கி முதன்மை செயல் அலுவலர் கிஷோர் காரத் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியன் வங்கியின் 2017-ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த 3-ஆவது காலாண்டில், இயக்க லாபம் 18.42 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது, ரூ.1,209.22 கோடியை அடைந்தது. 2016-ஆம் ஆண்டு இதே காலத்தில் இது ரூ.1,021.16 கோடியாக இருந்தது. 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவுற்ற 9 மாதத்தில் அதன் செயல்பாட்டு லாபம் 30.94 சதவீதம் வளர்ச்சியடைந்ததை அடுத்து ரூ.3,837.23 கோடியை எட்டியது . 2016-ஆம் ஆண்டு இதே காலக் கட்டத்தில் ரூ.2,930.56 கோடியாக இருந்தது.
வங்கியின் நிகரலாபம் (2017-ஆம் ஆண்டு டிசம்பர்) காலாண்டு முடிவில், ரூ.303.06 கோடியாக இருந்தது.
இது 2016-ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.373.47 கோடியாக இருந்தது. இந்த லாபத்தில் ஏற்பட்ட குறைவுக்கு மூலதனங்கள் மீதான சந்தை மதிப்பு சரிவு, பத்திர வருவாய் மற்றும் இதர ஒதுக்கீடுகள் காரணமாகும். 2017-ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிந்த 9 மாத காலத்தில் நிகர லாபமானது 3.78 சதவீதம் வளர்ச்சி கண்டு, ரூ.1,127.01 கோடியைத் தொட்டது. இது 2016-ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.1,085.98 கோடியாக இருந்தது.
2017 ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.4,903.08 கோடியை அடைந்தது. 2016-ஆண்டு இதே காலக்கட்டத்தில் இருந்ததை விட 7.59 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2016-ஆம் ஆண்டு இதே காலத்தில் இது ரூ.4,557.26 கோடியாக இருந்தது. 2017-ஆம் ஆண்டின் ஒன்பது மாத காலத்தில் ரூ.14,565.29 கோடியாக இருந்தது. இது 2016-ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.13,649.24 கோடியாக இருந்தது.
இந்தியன் வங்கியின் நிகரவட்டி வருவாய் ( 2017-ஆம் ஆண்டில்) டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 30.17 சதவீதம் அதிகரித்து, ரூ.1,622.70 கோடியை அடைந்தது. 2016-ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது ரூ.1,246.57 கோடியாக இருந்தது. 2017-ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிந்த 9 மாத காலத்தில் நிகர வட்டி வருவாய் 23 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது ரூ.4,625.86 கோடியை எட்டியுள்ளது. வங்கியின் நிகர வருவாய்(டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில்) 17.62 சதவீதம் வளர்ச்சி அடைந்து, ரூ.2,171 கோடியை தொட்டது. 2016-ஆம் ஆண்டு இதே காலத்தில் ரூ.1,846.27 கோடியாக இருந்தது. வங்கியின் உலகளாவிய வர்த்தகத்தின் அளவு 16.20 சதவீதம் வளர்ச்சி கண்டு, ரூ.3,59,653 கோடியாக இருக்கிறது. இதுபோல, மொத்த வைப்புத் தொகை அளவு 12.46 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது ரூ.2,06,533 கோடியாக இருக்கிறது என்றார் அவர்.