அனுமன் ஜெயந்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

0
920

அனுமன் ஜெயந்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் காலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெற்றன.
ஆஞ்சநேயருக்கு மலர் அபிஷேகம், சந்தன அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
அதே போல, காஞ்சிபுரம் தேரடியில் உள்ள கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

மதுராந்தகத்தில்…

மதுராந்தகத்தில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, மதுராந்தகம் சூரக்குட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி அறக்கட்டளை சார்பில் 108 பால்குட ஊர்வலம் நடத்துவது வழக்கம். அதே போல, நிகழாண்டு புதன்கிழமை அதிகாலை ஆஞ்சநேயர் உள்ளிட்ட சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் காலை 9 மணிக்கு 108 பெண்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
லட்சுமி நரசிம்ம சுவாமி அறக்கட்டளையின் பீடாதிபதி வேணுகோபால சுவாமி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தனர்.
பின்னர், ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. காலை 11.30 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 6.20 மணிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டில்…

மாமல்லபுரம் கிழக்கு ராஜ வீதியில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது.
காலை 5 மணிக்கு மூலவருக்கு சந்தனக் காப்பு அலங்காரம், உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. மாலை திருவீதி உலா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு வெற்றி மாலை, வடை மாலை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிப்பட்டனர்.

உத்தரமேரூரில் இன்று

உத்தரமேரூர் ஆனந்த வள்ளி நாயக சமேத சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில் எதிரே உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் வியாழக்கிழமை அனுமன் ஜயந்தி விழா நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு திருமஞ்சனமும், பிற்பகல் 3 மணிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரமும், மாலை 6 மணிக்கு வடமாலை சேவையும் நடைபெறும் என்று கோயில் தர்மகர்தா ஆர்.சேஷாத்திரி தெரிவித்தார்.

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 31 ஆயிரம் வடைமாலை அலங்காரம்

திருப்பந்தியூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி 31 ஆயிரம் வடைமாலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவள்ளூரை அடுத்த திருப்பந்தியூரில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு அனுமன் ஜயந்தியையொட்டி, புதன்கிழமை காலை 5.30 மணியளவில் மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது.
அதைத் தொடர்ந்து லட்சுமி குபேரருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 11 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 31 ஆயிரம் வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை 6 மணிக்கு நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு வடை பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு 10 மணிக்கு அரவான் களப்பலி கட்டைக்கூத்து நடைபெற்றது.
இதில் திருப்பந்தியூர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், அனுமன் ஜயந்தி விழாவையொட்டி, கடம்பத்தூரை அடுத்த வெண்மனம்புதூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், தாய் அஞ்சனா தேவி மடியில் அமர்ந்தபடி சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சின்னாளபட்டி…

சின்னாளபட்டி மாவட்டம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

திண்டுக்கல்–மதுரை நான்குவழி சாலையில் சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை பிரிவில் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று காலை முதலே ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் சின்னாளபட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி அங்குள்ள 17 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 1,000 லிட்டர் பால் மற்றும் இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதையடுத்து 16 வகை திரவிய அபிஷேகமும், 7 வகையான வர்ணாபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதன் பின்னர் தங்க கவசம் அணிந்து ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கொடைக்கானல்…

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வீர ஆஞ்சநேர்யர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. கொடைக்கானல் சின்மயா மிஷன்தபோவனம் சார்பில் இந்த பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து காயத்ரி அனுமன், பூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கொடைக்கானலில் நேற்று சாரல் மழை பெய்தது. இதனை பொருட்படுத்தாமல் ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நெய்க்காரப்பட்டி…

பழனியை அடுத்த கரடிக்கூட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. கரடிக்கூட்டம் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள 9ணூ அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

நத்தம்…

நத்தம் கோவில்பட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி மூலவருக்கு துளசி மாலை மற்றும் மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் காணிக்கையாக வடை மாலைகளும் மூலவருக்கு அணிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.