இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைவிமர்சனம்

0
844

இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைவிமர்சனம்

Rating ***3/5

கால் டாக்சி டிரைவராக இருக்கும் அருள்நிதியும்-நர்ஸ் மகிமா நம்பியாரும் காதலர்கள். ஒரு நாள் இரவில் மகிமா நம்பியாரை இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றுகிறார் அஜ்மல். அது முதல் மகிமா நம்பியாரை பின் தொடர்ந்து தொந்தரவு செய்கிறார் அஜ்மல். இதைப்பற்றி அருள்நிதியிடம் மகிமா நம்பியார் சொல்ல, அஜ்மலை தேடி அருள்நிதி அலைகிறார். இரண்டாவதாக மகிமாவின் தோழி சாயாசிங்கிடம் நெருங்கி பழகி அந்தரங்க வீடியோவை எடுத்துஅனுப்பி பணம் கேட்டு அஜ்மல் மிரட்டி தொந்தரவு செய்கிறார். மூன்றாவதாக ஆனந்த்ராஜ் சபல புத்தியால் அஜ்மலிடம் வசமாக மாட்டி பணத்தை இழக்கிறார். இவர்கள் மூவரும் இதை வெளியே சொல்ல முடியாத காரணத்தால் தன்னிச்சையாக அஜ்மலை பழி வாங்க நினைக்கின்றனர். அருள்நிதி அஜ்மலின் வீட்டை தேடிக் கண்டுபிடித்து செல்ல, அங்கே சுஜா வருணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ந்து வெளியேருகிறார். அங்கே இறந்து கிடக்கும் சுஜா வருணியை மூன்று பேரில் கொலை செய்தது யார்? எதற்காக? உண்மையான குற்றவாளி யார்? என்பதே க்ரைம் த்ரில்லர் க்ளைமேக்ஸ்.
அருள்நிதி முகபாவனையில் விரைப்பாக ஒரே மாதிரி எந்தவித மாற்றமும் காட்டாமல் கொடுத்த வேலையை செய்து விட்டு போகிறார்.
மகிமா நம்பியார், சாயா சிங் இவர்கள் இருவரின் கதாபாத்திரம் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மற்றும் வில்லனாக அஜ்மல், ஜான் விஜய், ஆனந்த்ராஜ், லட்சுமி ராமகிருஷ்ணன், வித்யா பிரதீப், சுஜா வருணி, ஆடுகளம் நரேன், ஆடுகளம் முருகேஷ் ஆகியோரின் பங்களிப்பு கனக்கச்சிதம்.
அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ் இசையும் பாடல்களும் படத்திற்கு பக்கபலம்.
எழுத்து, இயக்கம்-மு.மாறன். ஒரு மழை நாள் இரவில் கொலை நடக்க அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களில் யார் கொலையாளி? என்பதை யூகிக்கமுடியாத அளவிற்கு பல திருப்பங்கள் கொண்டதே சக்சஸ்புல்லான க்ரைம் எழுத்தாளர்களின் கதையாக இருக்கும். அதே போல் பல வித க்ரைம் கதைகளை ஒரே படத்தில் கொடுக்க நினைத்து கதாபாத்திரங்களின் படைப்பை உணரும் முன்னே ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுத்தி இறுதி வரை யூகிக்க முடியாத அளவிற்கு இயக்கியிருக்கிறார் மு.மாறன். அரசல் பழசான கதையை மீண்டும் கொடுத்திருப்பதால் பார்ப்பதில் எந்த விறுவிறுப்பும் ஏற்படவில்லை புதுமை என்று சொல்வதற்கில்லை.
அக்சஸ் பிலிம் ஃபாக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்திருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் விழித்திருப்பது கஷ்டம்.